டில்லி

ப்கான் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் 3 டன் மருந்துகளை இந்தியா அனுப்பி உள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து தாலிபான்கள் அந்நாட்டை மீண்டும் கைப்பற்றி உள்ளனர்.  தாலிபான்கள் கட்டுப்பாடுகளுக்கு அஞ்சி மக்களில் பலர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.  எஞ்சி உள்ள மக்களும், உணவு மருத்துவ உதவி இன்றி தவித்து வருகின்றனர்.

இதையொட்டி உலக சுகாதார அமைப்பு அந்நாட்டு மக்களுக்கு மருந்துகள் வழங்கி உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தது.  அதை ஏற்றுக் கொண்ட இந்தியா ஏற்கனவே 3 கட்டங்களாக கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி உதவி செய்தது.   தற்போது 3 டன் மருந்துகளை அனுப்பி உள்ளது.

காபூலில் இந்திய மருத்துவமனையான இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனை உள்ளது.  இங்கு இந்த மருந்துகள் ஒப்படைக்கப்பட உள்ளன.   மேலும் வரும் வாரங்களில்  ஆப்கான் மக்களின் உணவுப் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா கோதுமை உள்ளிட்ட தானியங்களை வழங்க உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.