டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 2 டன் மருந்து பொருட்களை  இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இவை, ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் மருந்துப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து, அந்நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.  தலிபான்கள் விதித்துள்ள பல கட்டுப்பாடுகளால் அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசை இதுவரை எந்த நாடும் அங்கீகரிக்காத நிலையில் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் மட்டும் வழங்கப்பட்டு வருகின்றன. அதுபோல, இந்தியாவும் மனிதாபிமான முறையில் உயிர்காக்கும் மருந்து பொருட்களை அனுப்பி வருகிறது.

ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு ஆண்டு டிசம்பர் மாதம் 2 டன் உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 2வது கட்டமாக, ஜனவரி 1ம் தேதி 5 லட்சம் டோஸ்கள் கோவாக்சின் தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டது.  தற்போது மூன்றாவது கட்டமாக 2 டன் உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள் ஆப்கானிஸ் தானுக்கு அனுப்பப்பட்டுள்ளன. காபூலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் இந்த பொருட்கள் ஒப்படைக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. வரும் வாரங்களில் கூடுதல் உதவிப்பொருட்கள், மருந்துகள், உணவு தானியங்கள் அனுப்பி வைக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறி உள்ளது.