டெல்லி:

எய்ட்ஸ் பாதித்த குழந்தைகள் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். 3 முதல் 19 வயது வரையிலான 637 பேர் அதில் கையெழுத்திட்டுள்ளனர். எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்கான மருந்து இருப்பு இல்லை. அதற்கு ஏற்பாடு செய்யும்படி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மருந்து பற்றாகுறைக்கு மத்திய அரசு தான் காரணமாக இருக்கிறது என்பது வேதனையான உண்மை.

அதன் விபரம்….

எய்ட்ஸ் நோயால் பாதித்த குழந்தைகளுக்கு வழங்கும் வகையில் சிப்லா மருந்து தயாரிப்பு நிறுவனம் ‘லோபிநவிர்’’ என்ற திரவ வடிவிலான மருந்தை (சிரப்0 தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த ஒரு நிறுவனம் மட்டுமே இந்தியாவில் இந்த மருந்தை தயார் செய்கிறது. தற்போது இந்த உற்பத்தியை சிப்லா நிறுவனம் திடீரென நிறுத்தியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டில் மத்திய சுகாதார துறையில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்திற்கு இந்நிறுவனம் மருந்துகளை வழங்கியது.

இதற்கான பணத்தை சுகாதார துறை இன்னும் வழங்காமல் நிலுவை வைத்துள்ளது. இதனால் மருந்து உற்பத்தியை சிப்லா நிறுத்தியதோடு, சுகாதார துறையின் எய்டஸ் மருந்து கொள்முதலுக்கான டெண்டரிலும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துவிட்டது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சக கூடுதல் செயலாளர் அருண் பாண்டா கூறுகையில்,‘‘ அவசர டெண்டர் கோரப்பட்டதுள்ளது. எனினும் உள்ளூர் சந்தை சில்லரை விற்பனையாளர்களிடம் மருந்து கொள்முதல் செய்ய அந்தந்த மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியத்துக்கு மத்திய சுகாதார துறை உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

சிப்லா உற்பத்தியை நிறுத்தியிருப்பதால் இந்த மருந்து சில்லரை வியாபாரிகளிடமும் கிடைக்கவில்லை. ‘‘நாடு முழுவதும் இந்த மருந்தை எந்த நிறுவனமும் உற்பத்தி செய்யவில்லை. ஒரே ஒரு தயாரிப்பாளரும் உற்பத்தியை நிறுத்திவிட்ட நிலையில் எப்படி இதை சில்லரை விற்பனையாளர்களிடம் வாங்க முடியும்’’ என்று மாநில அலுவலர் ஒருவர் தெரிவித்தார். மேலும், டெண்டரில் கலந்துகொள்ள சிப்லா நிறுவனத்துடன் எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியத்தை பேச்சுவார்த்தை நடத்த சுகாதார துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

நோயாளிகள் பணம் கொடுத்து வாங்கி கொள்ளும் வகையில் விற்பனை செய்யப்படுமா? என்ற கேள்வி இ.மெயில் மூலம் சிப்லா நிறுவனத்திடம் கேட்கப்பட்டது. ஆனால் இதற்கு பதில் கூற அந்நிறுவன சிஇஒ உமாங் வோஹ்ரா பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

பின்னர் நோயாளிகள் ஆர்வலர் லூன் கங்டிக்கு அனுப்பியுள்ள இ.மெயில் கடிதத்தில், ‘‘ சிப்லா எப்போது நோயாளிகளுக்கு துணையாக இருக்கும். இது இந்தியாவில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் இதே நிலை தான். பண பட்டுவாடா தொடர்பான பிரச்னைக்கு தீர்வு ஏற்படாதால் தான்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது’’ என்று கோஹ்ரா தெரிவித்துள்ளார். தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் எண்ணம் இல்லை என்பதை சிப்லா தெரிவித்துள்ளது.

சர்வதேச நிதி மையமோ அல்லது இந்திய அரசோ நிலுவை தொகையை கொடுத்தால் தான் உற்பத்தி தொடங்கப்படும் என்பதை சிப்லா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்த கடிதம் மூலம் மத்திய அரசு, சிப்லா, எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இடையேயான தொடர்பு முடிவுக்கு வந்துள்ளது. கங்டி சிப்லாவுக்கு அனுப்பிய மற்றொரு கடிதத்தில்,‘‘ என்னால் பணத்துக்கு எவ்வித முடிவும் எடுக்க முடியாத நிலை உள்ளது.

மத்திய அரசுக்கும் நெருக்கடி கொடுக்க முடியவில்லை. நன்கொடை அளிப்பவர்களுக்கும் அழுத்தம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனிமேல் மேற்கொள்ளப்படும் கொள்முதலுக்கு பணம் வழங்க உத்தரவாதம் அளிக்கப்படும். மருந்து இருப்பு இல்லாதது மற்றும் பற்றாகுறை காரணமாக நாங்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

‘‘இந்த தீவிர பற்றாகுறை இந்திய ஹெச்ஐவி திட்டத்திற்கு சோகம் மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உயிர் காக்கும் மருந்தை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கிடைக்கச் செய்யாமல் இருப்பது அரசியலமைப்புக்கு எதிரானதாகும். எதிர்பாராத வகையில் இந்த மருந்து தயாரிப்பில் இருந்து சிப்லா விலகி தனது உறுதியளிப்பை மீறிவிட்டது’’ என்று மூத்த வக்கீல் ஆனந்த் குரோவர் தெரிவித்தார்.

இறுதி முயற்சியாக எய்ட்ஸ் பாதித்த 637 குழந்தைகள் கையெழுத்திட்டு, பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண்ஜேட்லி, சுகாதார அமைச்சர் ஜே.பி.நாடா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், ‘‘ஹெச்ஐவி மருந்து இருப்பு இல்லாத விஷயத்தில் கவனம் செலுத்துமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த மருந்து கிடைக்க உறுதி செய்ய வேண்டும். உள்ளூர் குழந்தைகளுக்கு அதிகம் தேவைப்படுவதால் அந்த மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.