புதுடெல்லி: குடியுரிமைச் சட்டம் குறித்து மலேசிய நாட்டின் பிரதமர் மஹாதீர் முகமது தெரிவித்த கருத்திற்கு இந்தியா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமானது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் சம்பந்தப்பட்டது எனவும், இது யாருடைய குடியுரிமையையும் பாதிக்காது எனவும் வெளியுறவு அமைச்சகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
“கடந்த பல ஆண்டுகளாக இந்தியர்கள் ஒற்றுமையுடன் வாழும்போது, குடியுரிமைச் சட்டத்தின் அவசியம் என்ன? முஸ்லீம்களின் குடியுரிமையைப் பறிக்கும் செயல் வேதனைக்குரியது. அதுபோன்றதொரு சட்டத்தை இங்கே கொண்டுவந்தால் நிலைமை என்னவாகும்? குழப்பமும் நிலையற்ற தன்மையும்தானே உண்டாகும்?” என்பதாக கருத்துக் கூறியிருந்தார் மலேசியப் பிரதமர்.
இதற்கு வெளியுறவு அமைச்சகம் சார்பில், “3 நாடுகளிலிருந்து அகதிகளாக இந்தியா வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இது எந்தக் குடிமகனின் குடியுரிமையையும் பாதிக்காது மற்றும் பறிக்காது.
மலேசிய பிரதமரின் கருத்து தேவையற்றது. உண்மையைப் புரிந்துகொள்ளாமல் எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.