டெல்லி, இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை கடந்த 15 நாட்களாக தீவிரமாக இருந்து வந்த நிலையில், தற்போது சற்று குறையத் தொடங்கியுள்ளது., கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,68,147 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 99 லட்சத்து 25 ஆயிரத்து 604- ஆக அதிகரித்து உள்ளது.
நேற்று ஒரே நாளில் 3,00,732 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,62,93,003- ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு காரணமாக 3,417 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 959- ஆக உள்ளது.
தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 13 ஆயிரத்து 642- ஆகும்.
இதுவரை 15 கோடியே 71 லட்சத்து 98 ஆயிரத்து 207- கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கொரோனா பாதிப்பு சற்று குறையத் தொடங்கி உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று முன் தினம் 4.01 லட்சம் பாதிப்பு இருந்து வந்த நிலையில், நேற்று அது 3.92 லட்சம் பேராக குறைந்தது. இந்த நிலையில், அது மேலும் குறைந்து, கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 68 ஆயிரமாகி உள்ளது.