டெல்லி: இந்தியாவில் 111 நாட்களுக்கு பிறகு 35ஆயிரத்துக்கு கீழே கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 34,703 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது நேற்று முன்தினம் 43 ஆயிரத்து 71 பேருக்கும், நேற்று 39,796 பேருக்கும் இருந்த நிலையில், தற்போது 35ஆயிரத்துக்கு கீழே குறைந்துள்ளது.
நாடு முழுவதும் கடுமையான இழப்புகளை ஏற்படுத்திய கொரோனா 2வது அலையின் தாக்கம் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் சாமானிய மக்களிடையே இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக மேலும் 34,703 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணாக மொத்த பாதிப்பு 3,06,19,932 ஆக உயர்ந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2.11 சதவிகிதமாக உள்ளது. கடந்த 15 தினங்களாக தொற்று பாதிப்பு விகிதம் 3 சதவீதத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 51,864- ஆக உள்ளது. இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2,97,52,294 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 97.17 % ஆக உள்ளது.
நேற்று மட்டும் சிகிச்சை பலனின்றி 553 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 4,03,281 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில், தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 64 ஆயிரத்து 357- ஆக குறைந்துள்ளது.
இதுவரை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டோர் மொத்த எண்ணிக்கை 35,75,53,612 ஆக உயர்ந்துள்ளது.