டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 23,529 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தினசரி பாதிப்பு 20ஆயிரத்துக்கு கீழே குறைந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு மீண்டும் 20 ஆயிரத்தை தாண்டியது.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பதிவு குறைவாக காணப்பட்டது. நேற்று 18,870 பேருக்கும். நேற்று முன் தினம் 18,795 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,529 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்றின் பாதிப்பு ஏறி, இறங்கி வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், தொற்று பரவல் கட்டுக்குள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23 ஆயிரத்து 529 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதில் 12,161 வழக்குகள் கேரளாவில் பதிவாகி உள்ளது. நாடு முழுவதும், இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,37,39,980 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 311 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,48,062 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்போர் விகிதம்1.33 % ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 28,718 பேர் குணமடைந்துள்ளனர்.இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,30,14,898 ஆக உயர்ந்துள்ளது. குணமடைவோர் விகிதம் 97.83 % ஆக உள்ளது.
தற்போதைய நிலையில் நாடுமுழுவதும் 2,77,020 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 88,34,70,578 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 65,34,306 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.