டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை பதிவுகள் தெரிவிக்கும் நிலையில் உயிரிழப்பு அதிகரித்து வருவது மருத்துவ நிபுணர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் முக்கவசம் அணிந்து எச்சரிக்கையும் இருக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,61,386 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தினசரி நேர்மறை விகிதம் 11.6 சதவீதத்திலிருந்து 9.26 சதவீதமாகக் குறைந்துள்ளது, அதே நேரத்தில் வாராந்திர நேர்மறை விகிதம் 14.15% என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,16,30,885 ஆக உள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,67,059 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,61,386 ஆக குறைந்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 5,500 குறைவு.
அதே வேளையில் கொரோனா உயிரிழப்பு அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,733 கோவிட் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன, இதன் காரணமகா இந்தியாவில் மொத்த இறப்பு எண்ணிக்கை 4,97,975 ஆக உள்ளது. அதிக பட்சமாக கேரளாவில் 1,063 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்தியஅரசின் தகவலின்படி, கடந்த டிசம்பர் 30ந்தேதி அன்று கொரோனா உயிரிழப்பு 893 என பதிவாகி இருந்தது. இது 31ந்தேதி 959 ஆக அதிகரித்தது. தொடர்ந்து பிப்ரவரி 1ந்தேதி நிலவரப்படி உயிரிழப்பு மேலும் அதிகரித்து 1,192 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலையில், இன்றைய அறிவிப்பில் கொரோனா உயிரிழப்பு 1,733 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் உயிரிழப்பை விட நேற்று ஒரே நாளில் திடீரென மேலும் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு வாரமாக கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வருவது மருத்து நிபுணர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், உயிரிழப்பு அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழக்கும் பலர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை கடைபிடிப்பதுடன், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் உடனே தடுப்பூசி எடுத்துக்கொள்ளும்படி வலியுறுத்தி உள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி மேலும் 2,81,109 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,95,11,307 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 16,21,603 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலைநகர் டெல்லியில் செவ்வாயன்று 2,683 புதிய கோவிட்-19 வழக்குகள் 5.09 சதவீத நேர்மறை விகிதத்துடன் பதிவாகியுள்ளன. இதன் மூலம், தேசிய தலைநகரில் தொற்று எண்ணிக்கை 18,32,951 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 25,892 ஆகவும் உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,372 புதிய கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது முந்தைய நாள் 15,410 ஆக இருந்தது.
நாடு முழுவதும் இதுவரை 1,67,29,42,707 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 57,42,659 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 15-18 வயதிற்குட்பட்டவர்களில், 4,71,44,423 முதல் டோஸ்களும், 10,81,838 இரண்டாவது டோஸ்களும் கொடுக்கப்பட்டுள்ளன.