லடாக்: எல்லையில் சீன ராணுவ நிலைகளுக்கு அருகே உள்ள பிங்கர் 4 மலைப்பகுதியை இந்திய ராணுவம் மீண்டும் கைப்பற்றி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா சீனா இடையே எல்லைப்பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. பதற்றத்தை தணிக்கும் விதமாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு மந்திரிகள் மட்டம் உள்பட பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது. இருந்தாலும், சீன ராணுவம், அங்கிருந்து விலக மறுத்து வருவதால், பதற்றம் தொடர்ந்து வருகிறது.
லடாக்கின் லே-யில் உள்ள பாங்காங் ஏரி பகுதியில் சீன ராணுவ துருப்புகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இரு நாட்டு எல்லைகளுக்கும் முக்கிய இடமாக உள்ள இந்த பகுதியில் இரு நாடுகளும் படைகளை குவித்து வருவது பதற்றத்தை மேலும் கூட்டியுள்ளது.
இந்த பரபரப்புக்கு இடையே கடந்த வாரம், எல்லைப்பகுதியான அருணாசலபிரதேசத்தில், எல்லைப்பகுதியில் உள்ள கிராமத்தில் வேட்டைக்கு சென்ற 5 பேரை சீன ராணுவம் கடத்தி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால், எல்லைப்பகுதி மக்கள், தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு மாற்று இடத்துக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில், லடாக்கின் லே-யில் உள்ள பாங்காங் ஏரி பகுதியில் பல்வேறு நிலைகள் உள்ளன. அதன்படி பிங்கர் 1 முதல் பிங்கர் 14 வரை பல்வேறு நிலைகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. பாங்காங் ஏரியின் தெற்கு கரையோரத்தில் சீன வீரர்களின் பிங்கர் 4 (விரல் 4) நிலை அமைந்துள்ளது.
கடந்த ஏப்ரல்-மே மாதங்களில், இந்த பகுதிகளில் சீன படையினர் அத்துமீறி இந்த பகுதியை ஆக்கிரமித்து, நுழைந்துள்ளனர். தனது நிலைகளை அமைத்துள்ளனர். அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என இந்திய ராணுவம் வலியுறுத்தி வந்த நிலையில், அதை சீன ராணுவம் கண்டுகொள்ளவில்லை. அதை விட உயரமான பகுதியை இந்திய ராணுவம் கைப்பற்றி சீன ராணுவத்துக்கு செக் வைத்துள்ளது.