புதுடெல்லி: சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக்கின் நினைவிடம் அமைந்துள்ள கர்தார்பூர் காரிடாருக்கு விசா இல்லாமல் சீக்கிய யாத்ரிகர்கள் சென்றுவரும் வகையில் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், இதுதொடர்பாக எந்தவொரு ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
இருதரப்பிலும் நிகழும் சில குறிப்பிட்ட வேறுபாடுகளின் காரணமாக ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. பாகிஸ்தான் தரப்பில் யாத்ரிகர்களை உள்ளே அனுமதிப்பதற்கு சேவை கட்டணம் செலுத்துமாறு வலியுறுத்தப்படுகிறது.
ஆனால், பாகிஸ்தானின் இந்த நிபந்தனையானது, யாத்ரிகர்களின் இலகுவான மற்றும் எளிதான அணுகலுக்கு இடையூறாக இருக்கும் என்று இந்தியா கூறப்படுகிறது.
மேலும், கர்தார்பூர் காரிடார் வளாகத்தில் இந்திய துணைத் தூதர் அல்லது ஒழுங்குமுறை அதிகாரிகளை இருப்பதற்கும் பாகிஸ்தான் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் தனது நிலைகுறித்து மறுஆய்வு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கர்தார்பூர் சாகிப் காரிடாருக்கான புனிதப் பயணத்தை நடைமுறைக்கு கொண்டுவருவது குறித்த மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை, இந்திய – பாகிஸ்தான் அதிகாரிகளுக்கிடையே, பஞ்சாப் மாநிலத்திலுள்ள அட்டாரி சோதனைச் சாவடியில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.