சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 280 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது இந்தியா.

இன்று கடைசிநாள் ஆட்டம் நடைபெறும் நிலையில், 41 ஓவர்கள் இன்னும் எஞ்சியுள்ளது. இதில் 127 ரன்களை எட்ட வேண்டும்.

ரோகித் ஷர்மா அரைசதம்(51) அடித்து அவுட்டான நிலையில், இன்று தொடர்ந்து ஆடிய புஜாராவும் 77 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். ஆனால், மிக முக்கியமான கட்டத்தில் கேப்டன் ரஹானே ஏமாற்றினார். அவர், வெறும் 4 ரன்களுக்கு லயன் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.

அதேசமயம், இளம் வீரர் ரிஷப் பண்ட் தேவையை உணர்ந்து அற்புதமாக ஆடினார். அவர் வெறும் 118 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகளை மன தைரியத்துடன் அடித்து மொத்தம் 97 ரன்களை விளாசினார். இன்று அவர் ஒருநாள் போட்டியை ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, அனுமன் விஹாரியும் அஸ்வினும் களத்தில் உள்ளனர். இதுவரை உருப்படியாக எதுவும் செய்யாத அனுமன் விஹாரி, இன்றையப் போட்டியிலாவது எதையேனும் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போதுவரை 54 பந்துகளில் 4 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அஸ்வின் 25 பந்துகளில் 7 ரன்களை அடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய தரப்பில் ஹேசில்வுட் மற்றும் லயனுக்கு தலா 2 விக்கெட்டுகள் கிடைத்தன. கம்மின்ஸ் 1 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.