டெல்லி: பூடான் பிரதமருடன் பிரதமர் மோடி நடத்திய இருதரப்பு சந்திப்பின்போது பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. முன்னதாக, பூடானின் மிக உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் த டிரக் கியோல்போ’ விருதை பிரதமர் மோடிக்கு, மன்னர் ஜிக்மே கேசர் வழங்கினார்.
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி பூடான் சென்றுள்ளார். அங்கு பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கேயை திம்புவில் நேற்று (22-03-2024) பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடியை கெளரவிக்கும் வகையில் பூடான் பிரதமர் மதிய விருந்து அளித்தார். பாரோ-விலிருந்து திம்பு வரையில் பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் முழுவதும் மக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தமக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்காக பூடான் பிரதமர் டோப்கேவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பின்னர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விவசாயம், இளைஞர் பரிமாற்றம், சுற்றுச்சூழல், வனம், சுற்றுலா போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இருதரப்பு ஒத்துழைப்பின் முழு வரம்பையும் மறுஆய்வு செய்ய இந்தச் சந்திப்பு ஒரு வாய்ப்பை வழங்கியது. இந்தியா – பூடான் இடையே கூட்டாண்மையை மேம்படுத்தி, மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர். கெலெபு மைண்ட்ஃபுல்னெஸ் சிட்டி திட்டம் உட்பட இணைப்பு மற்றும் முதலீட்டு முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்தியாவும் பூடானும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வின் பண்புகளான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் தனித்துவமான உறவுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்பின் ஒரு பகுதியாக, எரிசக்தி, வர்த்தகம், டிஜிட்டல் இணைப்பு, விண்வெளி, விவசாயம், இளைஞர் பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.
முன்னதாக பூடான் சென்ற பிரதமர் மோடிக்கு அங்குள்ள பாரோ விமானம் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் டிஷெரிங் டோப்கே பிரதமர் மோடியை வரவேற்றார். பின்னர் வாகனத்தில் சென்ற பிரதமரை சாலையின் இருபுறமும் இந்திய பூட்டான் தேசிய கொடிகளை ஏந்தியபடி நின்ற பள்ளி சிறுமிகள் கையசைத்து வரவேற்றனர்.
இந்த பயணத்தின் போது பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக், பூடான் நான்காவது மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். மேலும் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கேவுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
பின்னர், மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக், முன்னாள் மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக்கை பிரதமர் மோடிசந்தித்தார். அப்போது, பூடானின் மிக உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் த டிரக் கியோல்போ’ விருதை பிரதமர் மோடிக்கு, மன்னர் ஜிக்மே கேசர் வழங்கினார். இது சமூகத்துக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு வழங்கப்படும் வாழ்நாள் சாதனை விருதாகும்.
மேலும், பூடானில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட நவீன மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஹிமாலய ராஜ்ஜியத்தின் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பூட்டான்-இந்தியா நட்புறவுத் திட்டமான திம்புவில் உள்ள கியால்ட்சூன் ஜெட்சன் பெமா தாய் மற்றும் குழந்தை மருத்துவமனையைத் திறந்துவைப்பதில் மோடியுடன் அவரது பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கேயும் கலந்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து, பூடான் அரசு வழங்கிய உயரிய விருதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், பூடான் மக்களுக்கு, குறிப்பாக இளம் குழந்தைகளுக்கு, மறக்கமுடியாத வரவேற்பு அளித்ததற்காக நன்றியுள்ளவனாக இருக்கிறேன். வழி முழுவதும் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்களின் அன்பை நான் பெரிதும் மதிக்கிறேன்.
திம்புவில் உள்ள கம்பீரமான தாஷிச்சோட்ஜோங் அரண்மனையில் கிடைத்த வரவேற்பு மற்றும் பாரம்பரிய சிப்ட்ரல் ஊர்வலம் பூடானின் வளமான கலாச்சாரத்தின் ஒரு காட்சியாக விளங்குகிறது.
பூடான் பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான வகையில் இருந்தது. இந்தியா-பூடான் நட்புறவை மதிப்பாய்வு செய்தோம். மேலும் இரு தரப்பு உறவு, கலாச்சார இணைப்புகளை ஆழப்படுத்தவும் ஒப்புக்கொண்டோம். இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்தியா-பூடான் உறவுகளுக்கு வலு சேர்க்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
It is with great humility that I accept the Order of the Druk Gyalpo. I am grateful to HM the King of Bhutan for presenting the Award. I dedicate it to the 140 crore people of India. I am also confident that India-Bhutan relations will keep growing and benefit our citizens. pic.twitter.com/bDtKZJsS7X
— Narendra Modi (@narendramodi) March 22, 2024