புதுடெல்லி:
ஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் இறுதிக்குள் தயாராகி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிடும். அடுத்த மாத இறுதிக்குள் 10 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி நமக்கு கிடைக்கும்’ என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும்பணியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்தப் பணி தற்போது இறுதி கட்ட பரிசோதனை நிலையை எட்டியுள்ளது.

மஹராஷ்டிராவின் புனேவை தலைமையிடமாக வைத்துச் செயல்படும் சீரம் நிறுவனம் ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆஸ்ட்ராஜெனகா அமெரிக்காவின் நோவாவாக்ஸ் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் உட்பட ஐந்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.சீரம் நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நான்கு கோடி ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து உள்ளது.

இந்நிலையில் ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடனான கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக சீரம் நிறுவனதலைவர் ஆதார் புனாவாலா தெரிவித்து உள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:

ஆஸ்ட்ராஜெனகாவுடன் இணைந்து 100 கோடி ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அவசர அனுமதி அரசிடம் இருந்து அடுத்த மாதம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு டிசம்பர் மாதம் துவங்க உள்ளது. எனவே ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்திடம் இருந்து அடுத்த மாதம் இறுதிக்குள் 10 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகளை பெறுவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.