கடந்த 21 நாட்களாக அமலில் இருந்த ஊரடங்கால், தொழிற்சாலைகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் பொழுதுபோக்கு கூடங்கள் மூடப்பட்டன. மேலும், அனைத்துவிதமான போக்குவரத்துகளும் முடிவடைந்தன.
வேளாண்மை, மருத்துவம், சுரங்கம், நிதிச்சேவையின் சில பிரிவுகள் மட்டும் செயல்பட்டன. மொத்தத்தில், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் 70% அளவிற்கு அடியோடு முடங்கின. இதனால் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து, அக்யூட் ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச் என்ற நிறுவனம் சார்பில் ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஊரடங்கால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தினமும் ரூ.35 ஆயிரம் கோடி வீதம், 21 நாட்களுக்கு சேர்த்து மொத்தம் ரூ.7.50 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஹோட்டல், ரியல் எஸ்டேட், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், 5% – 6% வரை பின்னடைவு ஏற்படும். நிலைமை சரியானால், இரண்டாவது காலாண்டில், சிறிதளவு மிதமான வளர்ச்சி தெரியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாடு முடங்கியுள்ளதால், ரியல் எஸ்டேட் துறைக்கு ரூ.1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.