புதுடெல்லி: நீண்டகால நோக்கில் இந்தியா எங்களுக்கான மிக முக்கியச் சந்தை என தெரிவித்துள்ளார் ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி டிம் குக்.
அவர் கூறியுள்ளதாவது, “இந்தியா தொடர்பாக எங்களின் நிறுவனம் சில நீக்குப்போக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் சில எதிர்பார்த்த முடிவுகள் கிடைத்துள்ளன.
குறுகியகால நோக்கில் இந்தியா ஒரு சவாலான சந்தையாக இருந்தாலும், நீண்டகால நோக்கில் பார்க்கும்போது, இந்தியா எங்களுக்கு மிக முக்கியமானதொரு சந்தை. நாங்கள் இதுதொடர்பாக அதிகம் கற்றுக்கொண்டு வருகிறோம்.
நாங்கள் எங்களுடைய உற்பத்தி மையத்தை இந்தியாவிலும் தொடங்கியுள்ளோம். ஏனெனில், அப்போதுதான் எங்களால் இந்த சந்தையில் சிறப்பாக சேவைசெய்ய முடியும். அந்த நிலைக்கு நாங்கள் எங்களை உருவாக்கிக் கொண்டுள்ளோம். ஐஃபோன் 7 அசம்ப்ளிங் மையம் பெங்களூருவில் துவக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தினுடைய அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களையும் திறப்பதற்கான விரிவான திட்டங்கள் இருப்பதாக தெரிவித்தார் குக்.