டில்லி

இந்தியா எதேச்சதிகார நாடாக மாறி வருவதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தற்போது தனது மக்களவை தொகுதியான கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் பயணம் செய்து அங்குள்ள நிலவரங்களைக் கண்டு வந்தார்.  அப்போது ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் சமீபத்தில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் எழுப்பினார்கள்.

அப்போது அவர், “பந்திப்பூர் புலிகள் சரணாலயப் பகுதியில் இரவு நேரப் பயணம் தடை செய்யப்பட்டுள்ளது.   இதை எதிர்த்து நடக்கும் போராட்டத்துக்கு நான் எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   மோடியை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்கு பாய்ந்து விடுகிறது.

மோடியின் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்து அவருக்குப் பகிரங்கக் கடிதம் எழுதிய 50 பிரபலங்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இந்தியா தற்போது எதேச்சதிகார நாடாக  மாறி வருகிறது.  மோடியை விமர்சித்தால் உடனே அரசு அவர்களை சிறையிலடைத்து விடுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.