புதுடெல்லி: கார்ப்பரேட் உலகில், சீனாவைப்போல் இந்தியாவிலும் பணிச்சுமை மிகவும் அதிகரித்து வருகிறது என்ற புகார்கள் எழுந்துள்ளன.

சீனாவைப் பொறுத்தவரை, கார்ப்பரேட் நிறுவனங்களில், காலை 9 முதல் இரவு 9 மணிவரை, ஒருநாளைக்கு 12 மணிநேரங்களும், ஒரு வாரத்திற்கு 6 நாட்களும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.

இதனால், ஊழியர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாவதோடு, படைப்பாக்கத் திறனும் பாதிக்கப்படுவதாக தொடர்ச்சியான புகார்கள் எழுகின்றன.

இதே பணி கலாச்சாரம், தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இதனோடு வேறுசில காரணிகளும் சேர்ந்துள்ளன.

அதாவது, தன்னார்வத்துடன் அதிக பொறுப்புகளை சுமந்துகொண்டு, அதிகநேரம் கடுமையான பணி செய்வோருக்கு, விரைவான பதவி உயர்வு, அதிக ஊதிய உயர்வு மற்றும் இதர வெகுமானங்கள் வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனமாக இருந்தாலும், அந்த நிறுவனம் சந்தையில் நிலைகொள்ள, பணியாளர்களின் இத்தகைய உழைப்பு தேவைப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.