டெல்லி: சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 970 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 441 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பரவல் அதிகரித்து வருவதால், கொரோனா கட்டுப்பாடுகளையும், தடுப்பூசி போடுவதையும் மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேநேரம், சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்ட விமானங்களுக்கு தடை இல்லை எனவும் அறிவித்துள்ளது.