சின்ஹுவா எனும் பிரபலச் சீனப் பத்திரிக்கை சீன அரசை ஆதரிக்கும் பத்திரிக்கை ஆகும். இந்தப் பத்திரிக்கையின் முதலாளி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ஆட்சிக் குழுவில் உறுப்பினராய் உள்ளார்.
இத்தகைய சின்ஹுவாவில் பணியாற்றி வந்த மூன்று மூத்த பத்திரிக்கையாளர்கள் இந்தியாவை விட்டு வெளியேற்றப்படவுள்ளனர் .
சின்ஹுவா பத்திரிக்கையின் டெல்லி அலுவலகத் தலைமைச் செய்தியாளர் வு குயாங்க் மற்றும் இரண்டு மும்பை அலுவலகத்தைச் சேர்ந்த லூ டாங்க் மற்றும் ஷி யோங்கக் ஆகிய மூவரும் வரும் ஜூலை 31 க்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு கடந்த வாரம் கேட்டுக் கொண்டுள்ளது.
சீன பத்திரிக்கையாளர்கள் இவ்வாறு நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவது இதுவே முதன்முறையாகும்.
இவர்கள் மூவரும் ஆள் மாறாட்டம் செய்து சீனர்களை இந்தியாவில் ஊடுருவ உதவிவருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
வு குயாங்க் ஆறு வருடங்களுக்கும் மேலாக விசாவை நீட்டித்து இந்தியாவில் தங்கி வருகின்றார். மற்ற இருவரும் விசா நீட்டிப்பு பெற்று தங்கி பணியாற்றி வந்தனர்,
சின்ஹுவா பத்திரிக்கை இதனை உறுதி செய்துள்ள போதும், சீன வெளியுறவுத்துறை இதுகுறித்து கருத்துக் கூற மறுத்துவிட்டது.
விசாவை புதுப்பிக்காமல் இருப்பதன் மூலம் தமது அரசை விமர்சிக்கும் அயல்நாட்டு பத்திரிக்கையாளர்களை நாட்டை விட்டு வெளியேற வைப்பது உலக நாடுகள் பின்பற்றும் உத்தியாகும்.
கடந்த டிசம்பர் மாதம் சீனா ஒரு பிரான்ஸ் நாட்டு ஊடகவியலாளரை நாட்டை விட்டு வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது. அவர் சீன அரசு சிஞ்சியாங் உய்கூர் எனும் தன்னாட்சி பெற்ற பகுதியைக் கையாண்ட விதம்குறித்து விமர்சித்து எழுதியிருந்தார்.
இந்தியாவைச் சேர்ந்த ஐந்து ஊடகவியலாளர்கள் சீனாவில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: indiandefensenews.in