ஜோகன்னஸ்பர்க்: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் செமி பைனலில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் ஜனவரி 17 முதல் பிப்ரவரி 9 வரை நடைபெறுகிறது. குரூப் ஏ-வில் இடம்பெற்ற இந்திய அணி தொடக்கத்தின் முதலே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
லீக்கில் அனைத்து அணிகளையும் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் மோதி 74 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
இறுதிப் போட்டிக்கு செல்லும் அணியை தேர்ந்தெடுக்கும் முதல் அரையிறுதி போட்டிஇன்று நடைப்பெற்றது. இந்தியா, பாகிஸ்தான் மோதிய இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ரோஹைல் நசீர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் ஹைதர் அலி தனியாக அணியின் ஸ்கோருக்கு அடித்தளம் அமைத்தார். ஆனால், மொஹமத் ஹுராய்ரா மற்றும் பஹத் முனிர் சோபிக்க தவறினர். அணியின் ஸ்கோர் மந்தமானது.
எனவே, அணியின் ஸ்கோரை உயர்த்த கேப்டன் நசீர் தனியாளாக போராடினார். ஆனால், அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ, பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் யாஷஸ்வி ஜைஸ்வால் மற்றும் திவ்யனாஷ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.
இதன் மூலம் இந்திய அணி 35.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 176 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டியதோடு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சிறப்பாக ஆடிய தொடக்க வீரர்கள் யாஷஸ்வி ஜைஸ்வால் 105 ரன்களும் திவ்யனாஷ் 59 ரன்களும் எடுத்தனர்.
இதுவரை 4 முறை உலக கோப்பையை வென்றுள்ள இந்திய ஜூனியர் அணி 5வது முறையாக கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.