டில்லி

ந்தியப் பாரம்பரிய உணவான கிச்சடி ஒரே நேரத்தில் 918கிலோ செய்து இந்தியா கின்னஸ் சாதனை புரிந்துள்ளது.

கிச்சடி என்பது இந்தியாவில் பல வருடங்களாக செய்து வரப்படும் ஒரு உணவாகும்.  அரிசி, பாசிப்பருப்பு,  உப்பு, மிளகு,  காய்கறிகள் ஆகியவைகளைக் கொண்டு கிச்சடி செய்யப்படுகிறது.   இது கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் செய்யப்படும் வெண் பொங்கல் போன்றதாகும்.    இது உடலுக்கு மிகவும் நல்லது என கருத்து உள்ளது.

இந்த உணவை இந்தியாவின் பாரம்பரிய உணவாக அறிவிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.    அதைத் தொடர்ந்து இந்தியாவின் புகழ்பெற்ற சமையல் வல்லுனர்களில் ஒருவரான சஞ்சீவ் கபூர் தலைமையில் அமைந்த குழு ஒன்று டில்லியில்  918 கிலோ கிச்சடி செய்தனர்.   இந்த சாதனையை கின்னஸ் சாதனைப் புத்தக ஆய்வாளர்கள் நேரில் கண்டு இதை சாதனையாக அங்கீகரித்து உள்ளனர்.

இந்த சாதனையை யோகா குரு பாபா ராம்தேவ் ஆரம்பித்து வைத்தார்.  “கிச்சடி என்பது ஒரு அருமையான சத்துணவு.   இதில் அனைத்து சக்திகளும் நிரம்பி உள்ளது.  இது ஒரு பரிபூரண உணவு” என ராம்தேவ் புகழ்ந்துள்ளார்.  இந்நிகழ்வில் உணவுத்துறை அமைச்சர் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.  இந்த கிச்சடி அக்‌ஷய பாத்திர ஃபவுண்டேஷன் மற்றும் குருத்வாராவுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டு 60000 மக்களுக்கு அளிக்கப்பட்டது.