புதுடெல்லி: பாகிஸ்தானின் இம்ரான்கான் அரசு தயாரித்துள்ள புதிய அரசியல் வரைபடத்தை ஒரு அரசியல் அபத்தம் என்றுகூறி கண்டனம் தெரிவித்துள்ளது இந்தியா.
பாகிஸ்தான் உருவாக்கியுள்ள அந்தப் புதிய வரைபடத்தில், ஜம்மு காஷ்மீர் மற்றும் குஜராத்தன் ஜுனாகத் பகுதிகள், பாகிஸ்தானின் பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
“பாகிஸ்தானின் வரலாற்றில், இதுவொரு மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்” என்று இந்த வரைபடத்திற்கான அமைச்சரவை ஒப்புதலைப் பெற்ற பிறகு தெரிவித்தார் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான்.
“இதுவொரு அரசியல் அபத்தம். நமது யூனியன் பிரதேசங்களான ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கிலும், குஜராத்தின் ஜுனாகத்திலும் பாகிஸ்தான் உரிமைகோருவதற்கு எந்தவித அடிப்படைகளும் இல்லை.
ஆனால், இத்தகைய கேலிக்குரிய வலியுறுத்தல்கள் எந்தவித சட்டப்பூர்வ தகுதியையோ அல்லது சர்வதேச அங்கீகாரத்தையோ பெறவில்லை” என்று வெளியுறவு அமைச்சகம் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.