டில்லி
ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி சோதனையை அதிக அளவில் நடத்த இந்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது உலக அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தற்போது பாதிப்பு அதிகரித்து வருவதால் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவை இந்தியா பின் தள்ளி விடும் என அஞ்சப்படுகிறது. எனவே இந்தியாவுக்கு தற்போது கொரோனா தடுப்பூசியின் தேவை அதிக அளவில் உள்ளது.
ரஷ்யா உற்பத்தி செய்துள்ள ஸ்புட்னிக் என்னும் கொரோனா தடுப்பூசி அந்நாட்டில் அதிக அளவில் சோதனை நடத்தப்பட்டு அனுமதி பெற்றுள்ளது. ஆயினும் விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் இந்த மருந்தின் பாதுகாப்பு மற்றும் திறன் குறித்து சந்தேகத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் புகழ் பெற்ற மருந்து நிறுவனம் இந்த மருந்தை இந்தியாவில் அதிக அளவில் ஆய்வு செய்ய அனுமதி கேட்டு இருந்தது.
இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை இந்த மருந்தை அதிக அளவில் சோதிக்க அனுமதி மறுத்துள்ளது. முதலில் சிறிய அளவில் பரிசோதனை நடத்தலாம் என யோசனை கூறி உள்ளது. இந்த மருந்தின் முந்தைய சோதனை விவரங்கள் குறித்து அதிக அளவில் தகவல்கள் வெளியிடவில்லை என்பதால் இந்த மருந்தின் பாதுகாப்பு குறித்து தெளிவாகத் தெரியவில்லை எனக் காரணம் கூறி உள்ளது.