டில்லி
சென்ற 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் சாலை விபத்துக்களில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,51,000 ஆக அதிகரித்துள்ளது
நாடெங்கும் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க அரசும், போக்குவரத்து காவலர்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆயினும் சாலை விபத்துகளால் பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் நேரிடுகின்றன. கடந்த 2018ம் ஆண்டிற்கான சாலை விபத்துகள் குறித்த புள்ளி விவரங்களைச் சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அந்த விவரங்களின் படி சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு ஒரு லட்சத்து 51 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 3,500 உயிரிழப்புகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. அதாவது உயிரிழப்புக்கள் 2.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் மொத்தம் 4,67,044 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதைச் சராசரியாகக் கணக்கிட்டால், ஒரு நாளில் சுமார் 1,280 விபத்துகளும், அதில் சராசரியாக 415 பேர் உயிரிழப்பதாகவும் உள்ளது. இதில். 64 சதவீத விபத்துகளுக்குக் காரணம் தவறான திசையில் வாகனத்தைச் செலுத்துவது எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன
சுமார் 29 சதவீதம் பேர் தலைக்கவசம் அணியாததால் உயிரிழந்துள்ளனர் அத்துடன். வாகனங்களில் சீட் பெல்ட் அணியாததால் 16 சதவீதம் பேரும்,வாகனம் செலுத்தும் போது தொலைப்பேசியை உபயோகிப்பதால் 2.4 சதவீதம் பேர் மற்றும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதால் 2.8 சதவீதம் பேரும் உயிரிழந்தனர்.
இந்த விவரங்களின்படி விபத்துகளில் மரணம் அடைவோர் எண்ணிக்கையில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதை அடுத்து மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும், தமிழகம் மூன்றாமிடத்திலும் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.