ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று அம்மாநில  கவர்னர் கிரிஷ் சந்திரா முர்மு தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன் அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதாவது காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக அவை பிரிந்துள்ளன. அதில் லடாக் சட்டசபை இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு மட்டும் சட்டசபை உள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்  மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி பாரதீய ஜனதா கூட்டணியுடன் ஆட்சி அமைத்தது. ஆனால், இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு மெகபூபா ஆட்சி கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக அங்கு தேர்தல் நடத்தப்படாமல் ஜனாதிபதி ஆட்சியே தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், காஷ்மீரில் சட்டமன்ற  தேர்தல் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மாநில கவர்னர் கிரிஷ் சந்திரா முர்மு தெரிவித்துள்ளார்.

ஜம்முவில் நடைபெற்ற காவல்துறையினர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கவர்னர் முர்மு,  காஷ்மீர் மாநிலத்தில் அமைதி ஏற்பட போலீசார் தங்களது மிக உயர்ந்த அர்ப்பணிப்புகளை செய்திருக்கிறார்கள். இது விலைமதிக்க முடியாதது. அடுத்ததாக நடைபெற உள்ள தேர்தலிலும் நீங்கள் முக்கியமாக பங்காற்ற வேண்டும். இந்த மாநிலம் விரைவில் தேர்தலை சந்திக்கப்போகிறது என்று கூறியுள்ளார்.