கயானா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், டிஎல்எஸ் முறைப்படி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியது.

இப்போட்டியிலும் கேப்டன் விராத் கோலி சதமடித்தார் என்பது கவனிக்கத்தக்கது. இதன்மூலம் இவர் தனது சத வேட்டையை மீண்டும் துவக்கிவிட்டாரோ என்றே கிரிக்கெட் ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

இதற்கு முன்னர், டி-20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. மழைக் குறுக்கிட்டதால், மேற்கிந்திய தீவுகள் அணி 35 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் நிறுத்தப்பட்டது.

பின்னர், இந்திய அணிக்கு 35 ஓவர்களில் 255 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 32.3 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் போட்டியில்தான் அதிரடி காட்டினார். 41 பந்துகளில் 72 ரன்களை விளாசிய அவர், 5 சிக்ஸ் மற்றும் 8 பவுண்டரிகளை அடித்தார்.

‍லெவிஸ் 43 ரன்களும், ஹெட்மேயர் 25 ரன்களும், பூரான் 30 ரன்களும் அடித்தனர். 35 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் டிஎல்எஸ் முறை நிர்ணயிக்கப்பட்டது.

இந்தியா சார்பில் கலீல் அகமது 3 விக்கெட்டுகளும், ஷமி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஜடேஜா மற்றும் சஹல் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் 35 ஓவர்களில் 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இம்முறையும் சொதப்பினர். தவான் 36 ரன்களும், ரோகித் 10 ரன்களுமே எடுத்தனர்.

ரிஷப் பண்ட் இப்போட்டியிலும் சோபிக்கவில்லை. ஆனால் , கடந்தப் போட்டியைப் போலவே, கோலியும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து போட்டியை இந்தியாவின் பக்கம் கொண்டுவந்தனர். கோலி தனது 43வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்தார். ஷ்ரேயாஸ் 65 ரன்களை அடித்தார்.

முடிவில், 32.3 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி போட்டியோடு சேர்த்து, ஒருநாள் தொடரையும் வென்றது இந்தியா.

மேற்கிந்திய அணிகள் தரப்பில் ஃபேபியன் ஆலன் 2 விக்கெட்டுகள் மற்றும் ரோச் 1 விக்கெட் வீழ்த்தினர்.