திருப்பதி

திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினர்களாக உள்ளவர்கள் பட்டியலில் பல மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பெயர்கள் உள்ளன

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தான உறுப்பினர்கள் ஆக அதிகாரிகள் மட்டுமின்றி அரசியல் சிபாரிசில் உள்ள தனியாரும் நியமிக்கப்படுவது வழக்கமாகும். இவ்வாறு நியமனம் செய்யப்படுவது ஒரு கவுரவம் எனப் பலரும் கருதுகின்றனர். எனவே இந்த உறுப்பினர்களுக்குச் சிபாரிசு செய்யப்படும் பெயர்களின் பட்டியலில் பல அரசியல் வாதிகள் தங்களுக்கு வேண்டியவர்களை ஆந்திர அரசுக்குப் பரிந்துரை செய்கின்றனர்.

இந்த வருடம் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் இரண்டு பேரையும், உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷா ஒருவரையும் பரிந்துரை செய்துள்ளனர். தெலுங்கானா முதல்வர் காவிரி சீட்ஸ் நிறுவனத் தலைவர் பாஸ்கர் ராவ் மற்றும் டி ஆர் எஸ் கட்சித் தலைவர்களில்  ஒருவரான மோரம்செட்டி ராமுலுவையும் பரிந்துரை செய்துள்ளார்.

அமித்ஷா தமிழ்நாட்டைச் சேர்ந்த வி கிருஷ்ணமூர்த்தியைப் பரிந்துரை செய்துள்ளார். கிருஷ்ணமூர்த்தி ஐசிஎஸ் அதிகாரி ஆவார். இந்தியா சிமென்ட் நிறுவன அதிபர் சீனிவாசனை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உறுப்பினராக்க  விரும்புவதாக தகவல்கள் வந்துள்ளன.

முன்னாள் மக்களவை உறுப்பினர் ஒய் வி சுப்பா ரெட்டி தேவஸ்தானத் தலைவராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டுள்ளார். இன்னும் ஓரிரு தினங்களில் ஆந்திர அரசு திருப்பதி தேவஸ்தான உறுப்பினர்கள் இறுதிப் பட்டியலை வெளியிட உள்ளதாகச் சொல்லப்படுகிறது.