டில்லி: இன்சூரன்ஸ் பிரியம் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைக்க வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு  எதிர்கட்சி தலைவர் ராகுல் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்தியஅரசுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த 2024-25ம் ஆண்டுக்கனா பட்ஜெட்டில், ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு பிரீமியத்தின் மீது 18 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மத்திய அமைச்சரவையில் உள்ள  சாலை போக்குவரத்து துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் பல்வேறு மாநில முதல்வர்கள் மட்டுமின்றி, ஆளுங்கட்சியை சேர்ந்த பல எம்.பி.க்களும்,  இந்த வரி விதிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே,  ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு பிரீமியத்தின் மீதான ஜி.எஸ்.டி., வரியை திரும்பப் பெறக் கோரி காங்., எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பதாதைகளடன்  போராட்டம் நடத்தினார். இதில்    காங்கிரஸ் எம்.பி.,க்கள், கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்களும் சேர்ந்து, இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி வரியை வாபஸ் பெற வேண்டும் என கோஷம் எழுப்பினர்.