ஹாமில்டன்:
சிசி மகளிர் உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐசிசி மகளிர் உலக கோப்பை தொடர் நியூசிலாந்தில் நடந்துவருகிறது. இந்திய மகளிர் அணி, முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது.

3வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை இன்று எதிர்கொண்டு ஆடியது இந்திய மகளிர் அணி. ஹாமில்டனில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் ஆடி 50 ஓவரில் 317 ரன்களை குவித்தது.

இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அதிரடியாக பேட்டிங் ஆடி சதமடித்தார். 119 பந்தில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 123 ரன்களை குவித்தார் மந்தனா. மிடில் ஆர்டரில் ஹர்மன்ப்ரீத் கௌர் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். கௌர் 109 ரன்களை குவிக்க, இவர்கள் இருவரின் அபாரமான பேட்டிங்கால் 50 ஓவரில் 317 ரன்களை குவித்தது இந்திய மகளிர் அணி.

318 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தனர். தொடக்க வீராங்கனை டாட்டின் மட்டும் அரைசதம் அடித்தார். அதிகபட்சமாக அவர் 62 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர மற்ற வீராங்கனைகள் அனைவருமே சொற்ப ரன்களில் வெளியேறியதால் 40.3 ஓவரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி.

இதையடுத்து 155 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.