ரஞ்சி:
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பரப்பான சூழ்நிலையில் டிராவில் முடிந்தது. பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி தோல்வியிலிருந்து தப்பியது.
ராஞ்சியில் தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய தீர்மானித்து. 137.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 451 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 603 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் இந்தியா 152 ரன்கள் கூடுதலாக பெற்றது.
2வது இன்னிங்ஷஸ தொடங்கிய ஆஸ்திரேலியா, 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 7.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்தது.
இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 8 விக்கெட்டுகளைக் கொண்டு 129 ரன்களை எடுக்க வேண்டிய நிலைமையில் ஆட்டத்தைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்துவீச்சைச் சந்திக்கமுடியாமல் தடுமாறியது. இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் ரென்ஷா 15 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு ஜடேஜா ஸ்மித்தை 21 ரன்களில் வீழ்த்தினார்.
உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 36 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்தது. ஷான் மார்ஷ் 15, ஹேண்ட்ஸ்காம்ப் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
அடுத்து மார்ஷும் ஹேன்ஸ்காம்பும் அபாரமாக ஆடி இந்திய அணியின் பல்வேறு முயற்சிகளை முறியடித்தார்கள். இதனால் தேநீர் இடைவேளையின்போது 69 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. 100-வது ஓவரின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்த நிலையில் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார் ஸ்மித். ஆட்டம் டிரா ஆக கோலி ஒப்புக்கொண்டார். ஹேன்ஸ்காம்ப் 72 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆஸி. அணியைத் தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.
இதனால் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-&1 என சமநிலையில் உள்ளது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் வரும் 25-ம் தேதி தொடங்கவுள்ளது.