நியூயார்க்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளதுடன், இந்த சூழ்நிலை மிகவும் கவலையளிப்பதாகவும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குக்தலில் சுற்றுலா பயணிகள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர். அதுவும் குறிப்பாக இந்துக்களை மட்டுமே சுட்டுக்கொன்றது இந்திய மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் உடனனான அனைத்து தொடர்பையும் துண்டித்துள்ளதுடன், இதன் காரணமாக இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்து, அட்டாரி – வாகா எல்லையை மூடியது. பாகிஸ்தான் குடிமக்களுக்கான விசாக்களையும் இந்தியா ரத்து செய்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் மற்றும் படிக்கும், சிகிச்சை பெறும் பாகிஸ்தானியர்களை உடனே வெளியேற்ற உத்தரவிட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இரு தரப்பும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்ததோடு சிம்லா ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது. மேலும் சிந்து நதி நீரைத் தடுப்பது போர் அறிவிப்பாகக் கருதப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் முப்படைகளையும் தயார் நிலையில் வைத்துள்ளது.
இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான சூழ்நிலை மிகவும் கவலையளிப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றத்தை தனித்து பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான சூழ்நிலையை ஐ.நா. தலைவர் குட்டெரெஸ் ‘மிகவும் நெருக்கமாக’ கண்காணித்து வருகிறார் என்று கூறிய ஐநா செய்தித் தொடர்பாளர் இந்திய மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள் ‘அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றும், நிலைமை மற்றும் நாம் கண்ட முன்னேற்றங்கள் மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பொதுச் செயலாளர் ‘மிகவும்’ வேண்டுகோள் விடுக்கிறார் என்றார்.
ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான நிலைமையை “மிகவும் நெருக்கமாகவும் மிகுந்த கவலையுடனும்” கண்காணித்து வருகிறார், மேலும் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ளுமாறு இரு அரசாங்கங்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் கூறினார்.
“ஜம்மு-காஷ்மீரில் இரண்டு நாட்களுக்கு முன்பு 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு நாங்கள் மிகவும் தெளிவாகக் கண்டனம் தெரிவித்தோம்,” என்று பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் வியாழக்கிழமை தினசரி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.