வாஷிங்டன்

ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா, ஈரான், ரஷ்யா மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் போரிட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களான தாலிபன், ஐஎஸ். கலீபா உள்ளிட்ட பல குழுக்கள் இயங்கி வருகின்றன.   இந்த தீவிரவாதக் குழுக்கள் உலகின் பல நாடுகளில் தங்கள் தீவிரவாத செயல்களை நடத்தி வருகின்றன.  இந்த குழுக்களை ஒடுக்க அமெரிக்கா தனது  ராணுவத்தை அனுப்பி வெகு நாட்களாகப் போர் புரிந்து வருகிறது.  இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார்

அந்த சந்திப்பில் டோனால்ட் டிரம்ப், “ஆப்கானிஸ்தான் நாட்டின் தீவிரவாதிகளை அடக்க மிகவும் பாடுபட்டு வருகிறது.  நாங்கள் காலிபாக்களை 100% அழித்து விட்டோம் எனக் கூறலாம்.   ஆனால் உண்மையில் 98% மட்டுமே அழிக்கப்பட்டுள்ளனர் என நான் எண்ணுகிறேன்.  மீதமுள்ள 2% தீவிரவாதிகளையும் அழிக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் ரஷ்யா ஈரான், இந்தியா, துருக்கி, ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பல பயங்கரவாத செயல்களை செய்துள்ளனர்.  ஆகவே இந்த நாடுகளும் ஆப்கானிஸ்தானை எதிர்த்து போராட வேண்டும்.  அமெரிக்கா சுமார் 7000 மைல் தூரத்தில் இருந்து போராடி வருகிறது.  ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு அண்டை நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் போரிடுவதில்லை.

இந்தியா முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தானுடன் போரிடுவது இல்லை.  ஆனால் நாங்கள் போரிடுகிறோம்.  பாகிஸ்தான் எப்போதாவது சிறிது போரிடுகிறது.  அதுவும் மிகச் சிறிய அளவில் போரிடுகிறது.  இது சரியானது இல்லை.  தற்போது ஐஎஸ் தீவிரவாதிகள் ஆயிரக்கணக்கில் எங்களிடம் சிறைப்பட்டுள்ளனர். அவர்களை ஐரோப்பா திரும்பப் பெற வேண்டும்.  ஏனென்றால் இந்த தீவிரவாதிகள் பிரான்ஸ்  மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.