லண்டன்

உலகக் கோப்பை 2019 முதல் அரை இறுதி போட்டியில் இந்திய அணி நியுஜிலாந்து அணியுடன் மோதுகிறது.

உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கி தற்போது 45 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. அதன் படி எந்தெந்த நாடுகள் எங்கு உள்ளன என்னும் விவரமும் வெளியாகி உள்ளன. முதல் நான்கு இடத்தை பிடித்த அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அந்த அரை இறுதியில் வெல்லும் அணி இறுதிப்போட்டியில் பங்கு பெறும்.

முதல் நான்கு இடங்களில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியுஜிலாந்து அணிகள் உள்ளன. நேற்றைய தோல்வியின் காரணமாக முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. போட்டி விதிகளின் படி முதலிடத்தில் உள்ள நாடும் நான்காம் இடத்தில் உள்ள நாடும் முதல் அரை இறுதியில் போட்டியிடும்.

அவ்வகையில் வரும் ஒன்பதாம் தேதி மான்செஸ்டரில் நடைபெற உள்ள அரை இறுதி போட்டியில் இந்தியாவும் நியுஜிலாந்தும் மோத உள்ளன. இந்த போட்டி மாலை 3 ம்ணிக்கு தொடங்குகிறது. ஆட்ட வல்லுநர்கள் இந்தியா வெற்றி பெற 72% மற்றும் நியுஜிலாந்துக்கு 28% உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அடுத்த அரை இறுதி ஆட்டம் பிர்மிங்ஹாமில் வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதுகின்றன. இந்த வருட போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி 1992 ஆம் வருடத்துக்கு பிறகு மீண்டும் அரை இறுதியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.