சென்னை
இன்று நடைபெறும் ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் மலேசிய அணிகள் மோதுகின்றன.
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற அரையிறுதி சுற்று ஆட்டத்தில், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, 19-வது இடத்தில் உள்ள ஜப்பானைச் சந்தித்தது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த வீரர் செல்வம் கார்த்தி 51-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான தென்கொரியா அணியுடன், மலேசியா அணி மோதியது. போட்டியின் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய மலேசியா அணி 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-மலேசியா அணிகள் மோதுகின்றன. இந்திய அணி இதுவரை 3 முறை சாம்பியன் பட்டம் வென்று 5-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மலேசியா அணி முதல் முறையாக இறுதிச்சுற்றில் அடியெடுத்து வைத்துள்ளது.
போட்டியில் 3-வது மற்றும் 4-வது இடங்களுக்கான பிளே-ஆஃப் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் மற்றும்-தென்கொரியா அணிகள் மோத உள்ளன.