உக்ரைனை விட்டு இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையே இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் மூண்டது.

இதனைத் தொடர்ந்து ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்ததுடன் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இறங்கின.

ரஷ்யா உடனான சுமூக உறவை முறித்துக்கொண்டதை அடுத்து அந்நாடுகள் எரிபொருள் மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டில் சிக்கியதுடன் பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

உக்ரைனில் இருந்து கோதுமை மற்றும் எரிபொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த இந்நாடுகள் உக்ரனை சுற்றிவளைத்துள்ள ரஷ்ய படைகளை மீறி எதையும் செய்ய முடியாத நிலையில் உள்ளது.

இந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தும் நோக்கில் ரஷ்யா உடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் ராணுவ கட்டுப்பாட்டை அதிபர் புடின் இன்று அமல்படுத்தினார்.

இதனால் உக்ரைன் மற்றும் ரஷ்யா-வில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்தியர்கள் யாரும் உக்ரைன் நாட்டுக்குச் செல்லவேண்டாம் என்றும் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த வழியில் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.