போபால்:
இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட மத்திய பிரதேச தலைநகர் போபாலில், அத்தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆரிப் ஆக்கில் ஏற்பாடு செய்திருந்தார். விழாவில் பாஜக எம்.பி கவுர், கையில் காங்கிரஸ் கொடி வைத்திருந்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு 15 அன்று ‘ பைகம்-இ-மொகபத்’ என்ற பெயரில் விழா நடத்துவது ஆரிப் ஆக்கில் வழக்கம். நிகழ்ச்சிக்கு அனைத்து மதத்தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளை கலந்துகொள்ள அழைப்புவிடுப்பார்.
நேற்று நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட, பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய பிரதேச முதலமைச்சரான பாபுலால் கவுர் கலந்துகொண்டார். மேலும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் எதிர்க் கட்சி தலைவருமான அஜய் சிங்கு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் போது நடைபெற்ற ஊர்வலத்தின் போது அனைவருக்கும் கையில் கொடி கொடுக்கப்பட்டது. அதே போல் பாபுலால் கையிலும் கொடி கொடுக்கப்பட்டது. ஆனால், பாபுலால் அது கட்சியின் கொடியா அல்லது இந்திய தேசிய கொடியா என்று கவனிக்காமல் ஊர்வலத்தில் சென்றார்.
அவர் கையில் காங்கிரஸ் கொடி வைத்திருந்ததை அறிந்த பா.ஜ.கவினர் மற்றும் பொதுமக்கள் திகைத்தனர். இந்த செயல் பாஜகவினர் மத்தியில் முனுமுனுப்பை ஏற்படுத்தியது. அவரின் செயல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஆகில் ”
நிகழ்ச்சியின் போது யாரோ அவர் கையில காங்கிரஸ் கொடியை தவறுதலாக
கொடுத்து விட்டனர். மேலும் அவர் பாஜக மீது அதிருப்தியிலிருப்பது அனைவரும்
அறிந்ததே, அவர் காங்கிரஸூக்கு வந்தால் அவரை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள
தயாராக உள்ளோம்” என கூறினார்.
இதற்கு பதிலளித்து பாபுலால் கவுர் கூறியது: “நான் ஒவ்வொரு வருடமும் சுதந்திர போராட்ட வீரன் என்ற முறையில் அந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வேன். என் கையில் யாரோ காங்கிரஸ் கொடியை வைத்துவிட்டார்கள். அது என் கட்சி
கொடியில்லை என்று அறிந்தவுடன் திருப்பிக் கொடுத்துவிட்டேன்”,என்றார்.
மேலும் தனக்கு பாஜகவை விட்டு வெளியேறும் எண்ணம் ஏதுமில்லை என்றும் பாஜக தன்னை சாதாரண தொண்டனாக இருந்து முதலமைச்சராகவும், தன் மருமகளை போபால் மேயராகவும் ஆக்கியதை எண்ணி பார்க்கவேண்டும் என்றும், இதைவிடுத்து மரணத்தருவாயிலிருக்கும் காங்கிரஸூக்கு செல்வேனா என்றும் கூறினார்.