ஜகார்த்தா: தற்போது இந்தோனேஷிய அதிபராக இருக்கும் ஜோகோ விடோடோ, மீண்டும் தேர்தலில் வெற்றிபெறும் நிலையில் உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் மூன்றாவது பெரிய ஜனநாயக நாடு என்றழைக்கப்படும் இந்தோனேஷியாவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. தற்போதை அதிபர் ஜோகோ விடோடோவுக்கும், முன்னாள் ராணுவத் தளபதி பிரபோவோ சுபியான்டோவிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
இந்தோனேஷியாவிலுள்ள 17,000 தீவுக்கூட்டங்களிலும் நிறைவடைந்த தேர்தலின் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன. இதில், தற்போதைய அதிபரே, முன்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
அதிகாரப்பூர்வமான முடிவுகள் அடுத்த மாதம்தான் வெளிவரும் என்ற நிலையில், தற்போதைய அதிபர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதியைவிட, 11% புள்ளிகள் அதிகம் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இவரே மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமிருக்கின்றன.
ஆனால், தான் தோல்வியடைந்தால் அதை ஒப்புக்கொள்ளப் போவதில்லை எனக் கூறியுள்ளார் முன்னாள் ராணுவத் தளபதி பிரபோவோ சுபியான்டோ.
– மதுரை மாயாண்டி