பிரமாதமாக ஜெயிக்கும் என்று கூறப்படும் திமுக, எந்தவொரு கூட்டணி கட்சியையும் இழக்க விரும்பாமல்(பச்சைமுத்து கட்சி மட்டும் வெளியேறியது), பொறுமையாக கையாண்டு, அவர்களுக்கு இடங்களை ஒதுக்கி, கடைசிநேரத்தில் வந்த பார்வர்டு பிளாக் கட்சியையும்கூட தனது அணியில் இணைத்துக்கொண்டது.

கூடவோ, குறையவோ, அவர்களுக்கான இடங்களின் எண்ணிக்கையை ஒதுக்கி கொடுத்து, எந்தெந்த இடங்கள் என்பதிலும் சற்று தாராளமாக நடந்து கொண்டுள்ளது.

ஆனால், அதிமுக முகாமில் இதற்கு நேர்மாறாக எல்லாம் நடந்து கொண்டுள்ளது. கூட்டணி கட்சிகளை மிகக் கடுமையாக கையாள்வதோடு, சில முக்கிய கட்சிகளை வெளியேற்றவும் செய்கிறார்கள். உண்மையிலேயே கூட்டணி கட்சிகளை அரவணைத்து, ஓரளவேனும் வெல்ல முடியுமா? என்று முயற்சித்துப் பார்க்க வேண்டிய நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், அதற்கு நேர்மாறாக தடாலடியாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில், அதிமுகவின் வாக்குவங்கி முதன்முறையாக 20%க்கு கீழே சென்றது. அப்படியிருக்க, தான் முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் இந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுகவை அதிக இடங்களில் போட்டியிட வைத்து, அதன்மூலம் வாக்கு சதவிகிதத்தை அதிகரித்துக் காட்டி, தனது தலைமையிலான அதிமுகவின் செல்வாக்கு கூடியுள்ளது என்பதை மட்டுமே காட்ட முயல்கிறாரா? எடப்பாடி பழனிச்சாமி என்ற கேள்வி எழுந்துள்ளது.