சென்னை: சென்னையில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், சென்னையின் புறநகர்பகுதியானஇ,ஸ்ரீபெரும்புதூர் அருகே தெரு நாய் கடித்து 8ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தெரு நாய்களின் தொல்லை மக்களின் உயிரைப் பறிக்கும் அபாயகரமான நிலையை எட்டியிருக்கிறது. கடந்த ஆண்டு, ராஜஸ்தானில் ஒரு மருத்துவமனையிலிருந்து பச்சிளம் குழந்தையைத் தெரு நாய்கள் தூக்கிச் சென்றுவிட்டதாகச் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதுபோல, தெலங்கானாவில் நான்கு வயது குழந்தையைத் தெரு நாய்கள் கடித்துக் குதறிக் கொன்ற காட்சிகளும் வெளியாகி மனதை பதபதைக்க வைத்தன. சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் அவ்வப்போது தெருநாய்களால் பெண்கள், முதியோர்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவதுஅதிகரித்து வருகிறது.
இதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தாலும், தெருநாய்களை கொல்லக்கூடாது என்று சட்டம் சொல்வதால், அதை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில், சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 13 வயது மாணவனை தெருநாய் கடித்து குதறியுள்ளது. இதுகுறித்து சிகிச்சை எடுத்து வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே ஆத்திரத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடக்குப்பட்டு ஊராட்சி புதிய காலனி பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர். இவருடைய மகன் விஸ்வா(13) அரசு உயர்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். விஸ்வா கடந்த 7 ம் தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது அந்த பகுதியில் உள்ள தெரு நாய் கடித்துள்ளது.
இதுகுறித்து விஸ்வா தனது பெற்றோரிடம் தெரிவித்துள்னார். இதையடுத்து அவனது பெற்றோர்கள் விஸ்வாவை ரெட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ஏப்ரல் 10ந்தேதி அன்று இரவு 9 மணி அளவில் விஷ்வாவிற்கு திடீரென வயிற்றுவலி மற்றும் தலைவலி ஏற்பட்டதால் பெற்றோர்கள் ஒரகடம் அருகே மாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வலியுறுத்தியதால் விஸ்வாவை அவரது பெற்றோர்கள் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு விஸ்வாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஸ்வா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.