திரிபுரா மாநிலத்தில் எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதீப்ராய் பர்மான் வருத்தம் தெரிவித்துள்ளார்.
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள பகத்சிங் விடுதியில் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு விழாவில் திரிபுரா மாநில துணை முதல்வர் ஜிஷ்ணுதேவ் வர்மா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுதீப்ராய் பர்மான் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சுதீப்ராய், ‘திரிபுரா மாநிலத்தில் எச்.ஐ.வி. வைரஸால் ஏற்படும் பாதிப்பு குறிப்பாக பெண்களுக்கு அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களுக்காக ஒட்டுமொத்த மருத்துவ நிதியில் 98 சதவீதம் செலவழிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வைக் கண்டுபிடிக்கவேண்டும்’ என்று பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், “சமீபத்திய அறிக்கை ஒன்று மாநிலத்தில் எச்.ஐ.வி. வைரஸினால் பெண்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறது. நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட வேண்டும். கூடியவிரையில் அந்த எண்ணிக்கை சரிவைச் சந்திக்கவேண்டும்” என்று ம் வேண்டுகோள் விடுத்தார்.