சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு காரணமாக, அரசு மருத்துவமனைகளில் டெங்கு சிறப்பு வார்டு அமைக்க  தமிழ்நாடு அரசு மக்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை, ஓமந்தூரார், அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தலைமையில், டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மாநில மாவட்ட அலுவலர்களுடன்  கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் மா.சு.  குரங்கு அம்மை நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கையேட்டினை வெளி யிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,   தமிழகத்தில்  இதுவரை  ஏற்பட்டிருக்கிற இந்த ஆண்டுக்கான டெங்கு பாதிப்பு என்பது 11,743. இதில் இறப்புகளை பொறுத்தவரை 4 என்கின்ற எண்ணிக்கையில் நிகழ்ந்திருக்கிறது. பெரிய அளவில் டெங்கு பாதிப்பு இல்லை என்றவர், டெங்கு பரவல்  நமது கட்டுப்பாட்டில் இருக்கிறது என கூறியிருந்தமார்.

இந்த நிலையில்,  டெங்குவை தொற்று நோயாக கர்நாடக மாநிலம் உள்பட சில மாநிலங்களில் அறிவித்துள்ள நிலையில்,   தமிழகத்தில்  டெங்கு பரவலை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் டெங்கு சிறப்பு வார்டு அமைக்க மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் டெங்கு பரவல் தீவிரமடைந்துள்ளதால், அங்கு  அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.  குறிப்பாக கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருப்பூர், தருமபுரியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மருத்துவத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் டெங்கு சிறப்பு வார்டுகள் அமைக்கவும் எல்லையோர மருத்துவமனைகளில் காய்ச்சலோடு வருபவர்களின் விவரங்களை அறியவும் தமிழக மருத்துவத்துறை ஆணையிட்டுள்ளது.

அத்துடன் சிகிச்சைபெறும் நோயாளிகளின் விவரம், மருந்து கையிருப்பு விவரங்களை வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

மருத்துவத்துறை உத்தரவுகளின்படி, கர்நாடக மருத்துவத்துறை அதிகாரிகளுடன் இணைந்து டெங்கு பாதிப்பை கண்காணித்து வருவதாக தமிழக சுகாதாரத் துறையினர் தகவல் அளித்துள்ளனர்.

மேலும் டெங்கு பாதிப்பை எதிர்கொள்ள சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு 40 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.