சென்னை: தமிழ்நாட்டில்  பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக,  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான காவல்துறையின்  கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், சென்னை மாநகரில்,  பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ காப் வசதியை சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தி  உள்ளது.

இந்த ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப் என்ற புதிய பாதுகாப்பு சாதனம் மாநகரின் 200 முக்கிய இடங்களில்  விரைவில் பொருத்தப்பட இருப்பதாகவும், மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் சாதனத்தை பொருத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும்,  இது  24 மணிநேரமும் இயங்கக் கூடிய இந்த பாதுகாப்பு சாதனம் 360 டிகிரியில் சாலையின் அனைத்து பகுதிகளையும் அலசி ஆராயும் என்றும்,   சாதனத்தில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்துவதன் மூலம் காவல் கட்டுபாட்டு அறையுடன் நேரடி தொடர்பு ஏற்பட்டுஇ உடனடியாக காவல் துறைக்கு அழைப்பும், அருகில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை எச்சரிக்கைப்படுத்தவும்  செய்யும் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இதனால்,  ஆபத்தில் உள்ளவர்கள் உடனடியகாக காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ள வசதி கிடைக்கும் என்பதுடன்,   வீடியோ கால் மூலம் ஆபத்தில் உள்ளவரின் நிலை அறிந்து கொள்ளவும் முடியும் என்று கூறப்படுகிறது.

மிழகத்தின் தலைநகரான சென்னையில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கு இலட்சக்கணக்கான இளம் பெண்கள் பணிபுரிகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் கூட ஐடி வேலை, டெலிவரி வேலை ஆகியவற்றில் கூட தைரியமாக செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவ்வாறு இரவு நேரத்தில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்புக்காக சென்னை காவல்துறை ரோபோடிக் காவலர் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,”சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் சென்று வரும் பொது இடங்கள், சில குற்ற நிகழ்வு இடங்களிலும் அவசர காவல் உதவிக்காக, பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக ‘ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்” (ரோபோ போலீஸ்) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த பாதுகாப்பு சாதனத்தில் 24 மணி நேரமும் 360 டிகிரியில் பல மீட்டர் தூர துல்லிய கண்காணிப்பு பதிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நேரடி காணொளி காட்சி பதிவு, குரல் தொடர்பு பதிவுகள், போலீஸ் துறையுடன் ஆபத்தில் உள்ள பொதுமக்கள் உரையாடும் வசதி, அவசர அழைப்பு எச்சரிக்கை ஒலி வசதி, உயர் தர நவீன வீடியோ கேமரா மற்றும் மைக்ரோபோன் வசதி, ஜி.பி.எஸ். வசதி, மக்கள் எந்த இடத்தில் இருந்தாலும் ஒரு அழைப்பிற்கு உதவிடும் விரைவான நடவடிக்கைகள், உயிர் காக்கும் செயல்பாடுகளுடன் தகுந்த திறன் பயிற்சியுடன் கூடிய போலீஸ்துறையினர் மூலம் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த சாதனத்தில் உள்ள ஒரு சிவப்புநிற பொத்தானை ஆபத்தில் இருக்கும் நபரோ அல்லது அவருக்காக மற்றொரு நபரோ அழுத்துவதன் மூலம் உடனடியாக காவல்துறைக்கு அழைப்பு வரும். அருகில் உள்ளவர்களுக்கு ஒலி எழுப்பி எச்சரிக்கை சப்தம் ஏற்படுத்தி உதவும். ஆபத்தில் உள்ளவருக்கு வீடியோ கால் மூலம் நேரடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முடியும். ரோந்து போலீஸ் வாகனங்கள் வீடியோ கால் அழைப்பு மூலம் நிகழ்வுகளை கண்காணித்து உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து வந்தடைந்து உரிய நடவடிக்கை எடுத்திடவும். கேமரா பதிவுகள் மூலம் நிகழ்வுகளை கொண்டு புலன் விசாரணையை தொடங்கி நடவடிக்கை எடுக்கும் வகையிலும் தொழில்நுட்ப வசதிகள் இடம் பெற்றுள்ளன.

சென்னை போலீஸ் எல்லையில் உள்ள 12 காவல் மாவட்டங்கள் கொண்ட 4 மண்டலங்களில் தலா 50 இடங்களில் மொத்தம் 200 போலீஸ் ரோபோ சாதனத்தை நிறுவிட போலீஸ் அதிகாரிகள் மூலம் கள ஆய்வு நடத்தி விபரங்கள் பெறப்பட்டுள்ளது. You May Also Like “மூடப்படும் டாஸ்மாக் மதுக் கடைகள்..தமிழகம் முழுவதுமே பூட்டு! வெளியான முக்கிய அறிவிப்பு.. என்ன காரணம்?” சென்னையில் ரெயில், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐ.டி. நிறுவனங்கள், பூங்காக்கள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வந்து செல்லும் இடங்களில் கண்காணிப்புக்காக போலீஸ் ரோபோ சாதனங்கள் வருகிற ஜூன் மாதம் முதல் நிறுவப்பட உள்ளது.”

இவ்வாறு கூறப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு! காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்..