டெல்லி: பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய செய்தி வெளியிட்ட பிபிசி செய்தி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபோல மும்பை அலுவலகத்திலும் ரெய்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரம் குறித்து, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மோடி கேள்விகள்’ என்ற ஓர் ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருந்தது. ஆனால், குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடிக்கு எதிரான எந்த சாட்சியமும் இல்லை என்று கூறி அவரை குற்றச்சாட்டுக்களில் இருந்தும் உச்ச நீதிமன்றம் விடுவித்தது.
இதனால், பிபிசியின் ஆவணப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், மத்தியஅரசு அந்த படத்துக்கு தடை விதித்தது. இது தொடர்பாக இரு வேறான கருத்துக்கள் பரவி வருகின்றன. இதையடுத்து பிபிசிஐ தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அலுவலகத்தில் உள்ள ஊழியர்களின் செல்போன்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஊழியர்களும் அலுவலகத்தை விட்டு சீக்கிரம் வீட்டிற்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதேவேளையில் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்திலும் ரெய்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை தொடர்ந்து, பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில் முக்கிய ஆவணங்கள் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறும்போது,. சர்வதேச வரிவிதிப்பு மற்றும் பரிமாற்றங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால் பிபிசி அலுவலகத்தில் சர்வே நடத்தப்பட்டது. இதற்கு பெயர் ரெய்டோ, சோதனையோ அல்ல. இதற்கு பெயர் சர்வே. சில பத்திரிகையாளர்களின் செல்போன், ஆவணங்களையும் வருமானவரித்துறை எடுத்துச்சென்றுள்ளனர். எடுத்துச் சென்ற பொருட்கள் ஒப்படைக்கப்படும்.
எங்களுக்கு சில விளக்கங்கள் தேவைப்பட்டதால், எங்கள் குழுவினர் பிபிசி அலுவலகத்துக்குச் சென்று சர்வே செய்தனர். எங்கள் அதிகாரிகள் பிபிசி அலுவலகத்தைவிட்டு சென்றுவிட்டார்கள். இதற்கு சோதனை என அர்த்தம் அல்ல, சர்வே” எனத் தெரிவித்தனர்