திருவண்ணாமலை: முன்னாள் திமுக அமைச்சரும், திமுக வேட்பாளருமான திருவண்ணாமலை ஏ.வ.வேலுவின் விடு, கல்லூரி, அலுவலகம் மற்றும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களிடம் வாக்குகளை பெறும் நோக்கில், பணம் வழங்க உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், ரெய்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் ஏ.வ.வேலு. இவர் அதிமுக தொடக்க காலம் முதல் அக்கட்சியில் இருந்து வந்தார், எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜானகி அணியில் சேர்ந்தார். பின்பு அதிமுகவில் சேர்க்கப்படாததால் எ.வ. வேலு திமுகவில் இணைந்தார். திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த எ.வ. வேலு இன்று அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ளார். தற்போது நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார்.
இவர் வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள அஃபிடவிட்டில், சொத்து மதிப்பு, 5 கோடியே, 32 லட்சத்து, 2,481 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏ.வ.வேலு பெயர் மற்றும் மனைவி சங்கரி பெயரில், அசையும், அசையா சொத்துகள் மற்றும் வங்கி இருப்பு, தங்க நகைகள் என, மொத்தம், 14 கோடியே, 55 லட்சத்து, 56 ஆயிரத்து, 408 ரூபாய்க்கு சொத்துகள் உள்ளன. கடன் செலுத்த வேண்டியவை, 4.08 கோடி ரூபாய்.
கடந்த, 2016 தேர்தலில், அசையும் சொத்தாக, ஒரு கோடியே, 7 லட்சத்து, 39 ஆயிரத்து, 927 ரூபாய், அசையா சொத்தாக, 8 கோடியே, 16 லட்சத்து, 14 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. கடந்த தேர்தலை விட, 5 கோடியே, 32 லட்சத்து, 2,481 ரூபாய் அளவுக்கு சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க உள்ளதாக வந்த புகாரின்பேரில், எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. எ.வ. வேலு வீடு, அலுவலகம், அறக்கட்டளை அலுவலகம், கல்லூரி உள்பட அவரது உறவினர்கள், முக்கிய நண்பர்கள் என 10க்கும் மேற்படட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் எ.வ.வேலுவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு பிரச்சாரம் செய்து வரும் நிலையில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏ.வ.வேலுவின் சொத்து மதிப்பு விவரம் அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்…