சென்னை

குட்கா விற்பனை விவகாரம் குறித்து வருமான வரித்துறை மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தகவல் அனுப்பியுள்ளது.

குட்கா எனப்படும் புகையிலைப் பொருட்களுக்கு தமிழ்நாட்டில் 2013 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.  ஆனால் தடையை மீறி தொடர்ந்து கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து பல புகார்கள் கொடுக்கப்பட்டதால் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்ற வருடம் பல இடங்களில் சோதனை நடத்தினார்கள்.  வடசென்னையில் உள்ள குட்கா உற்பத்தி நிறுவனத்திலும், நிறுவன பங்குதாரர்கள் இல்லத்திலும் அலுவலகத்திலும் சோதனை நடந்தது.  அதில் ஒரு டைரி கிடைத்தது;

அந்த டைரியின் மூலம் பான்மசாலா விற்பனை செய்வதற்கு மாதந்தோறும் அமைச்சர், போலீஸ் கமி‌ஷனர், துணை போலீஸ் கமி‌ஷனர் உள்பட உயர் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டு இருப்பது அம்பலமானது.  சென்ற ஆண்டில் மட்டும் ரூ 40 கோடி வரை லஞ்சம் கொடுத்ததை அந்த நிறுவனத்தின் உரிமையாளரும் ஒப்புக் கொண்டார்.

தமிழக அரசுக்கு இந்த விவரங்களை வருமானவரித்துறை தெரிவித்தது.  அரசு போலீசாருக்கு விசாரணை செய்ய ஆணையிட்டது.  ஆனால் போலீசார் இன்று வரை எந்த விசாரணையும் நடத்தவில்லை.  பலமுறை நினைவுறுத்தியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவிலை.

எனவே வருமான வரித்துறை, குட்கா விற்பனைக்காக லஞ்சம் பெற்ற காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் ஆகியோரை பற்றிய பட்டியலை தயாரித்தது.  அந்தப் பட்டியலை மத்திய நிதி அமைச்சகத்துக்கும், ஊழல் தடுப்புத்துறைக்கும், சுங்கத்துறைக்கும் அனுப்பியுள்ளது.  உடன் அனுப்பிய கடிதத்தில் எந்தெந்த அதிகாரிகள் எவ்வளவு லஞ்சம் பெற்றனர் என்னும் விவரத்தையும் அனுப்பியது.

மேலும் குட்கா. பான்மசாலாவை சட்ட விரோதமாக தயாரித்து, விற்பனை செய்வதற்கு இந்த அதிகாரிகள் எப்படியெல்லாம் உதவியாக இருந்தனர் என்பதையும் வருமான வரித்துறை அந்தக் கடிதத்தில்  அம்பலப்படுத்தியுள்ளது.   அது மட்டுமின்றி அந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கடிதத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.