டில்லி:
நாடு முழுவதும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய ஆகஸ்டு 31ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்ததால், அன்று ஒருநாள் மட்டும் 49.29 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இது புதிய உலக சாதனையை படைத்துள்ளது.
நாடு முழுவதும் 2018-19 ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் பணி ஏப்ரல் மாதம் முதல் தொடங்கியது. முதற்கட்டமாக வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய, கடந்த ஜூலை 31-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு, ஆகஸ்டு.31 கடைசி நாள் என்றும், அதற்கு பிறகு வருமான வரி தாக்கல் செய்பவர்கள் அபராதம் செலுத்த நேரிடும் என எச்சரிக்க விடப்பட்டிருந்தது.
அதன்படி, கடந்த 31ந்தேதி வருமான வரித்தாக்கல் செய்ய ஏராளமானோர் குவிந்தனர்.
இந்நிலையில், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், மேலும் ஒரு மாதத்துக்கு (செப்.30 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால், வருமான வரி தாக்கல் செய்வோரிடையே குழப்பம் ஏற்பட்டது.
இதுகுறித்து மத்திய நேரடி வரி வாரியம் (சிபிசிடி) விளக்கம் அளித்தது. வருமான வரி தாக்கல் செய்யும் தேதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், வருமான வரிக் கணக்கை ஆகஸ்ட் 31-க்குப் பிறகு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் உறுதியாக தெரிவித்தது. மேலும், தாமதமாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்பவர்கள், அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 2019-2020-க்கான வருமான வரிக் கணக்கை கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் ஆன்லைன் மூலம் (ஆக. 31) மட்டும் 49.29 லட்சம் பேர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளதாக மத்திய நேரடி வரி வாரியம்தெரிவித்துள்ளது. இது புதிய சாதனையாக கருதப்படுகிறது.
ஒரு மணி நேரத்தில் மட்டும் சராசரியாக 2.05 லட்சம் பேரும், ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 8,500 பேரும், விநாடிக்கு 142 பேரும் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்துள்ளனர்.
வரி செலுத்துவோரில் சுமார் 2.86 கோடி போர் (79 சதவீதம்) ஆன்லைன் சரிபார்ப்பைத் தேர்ந் தெடுத்து உள்ளனர், பெரும்பாலும் ஆதார் ஓடிபியையே பயன்படுத்தி உள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 5.65 கோடி போர் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்துள்ளதாக வும், கடந்த 5 நாட்களில் மட்டும்1.5 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
கடைசி நாளன்று (ஆகஸ்டு 31ந்தி மட்டும்)ஒரு வினாடிக்கு அதிகப்பட்சமாக 196 பேர் ஆன் லைன் மூலம் கணக்கு தாக்கல் செய்ததாகவும், நிமிடத்துக்கு 7447 பேர் என்றும் மணிக்கு 3,87,571 பேர் கணக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்து உள்ளது.
அதுபோல வருமான வரி இணையத்தின் மீது 2,205 ஹேக்கிங் தாக்குதல்கள் நடைபெற்றதாகவும், அதுமுறியடிக்கப்பட்டதாகவும் கூறி உள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வருமான வரித்தாக்கல் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 4 சதவிகிதம் உயர்ந்து இருப்பதாகவும், கடந்த ஆண்டு 5.42 கோடி பேர் கணக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த ஆண்டு 5.65 கோடி பேர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளது.