சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மகன், சம்பந்தி  மற்றும் முன்னாள் அமைச்சர் 8 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து, ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது வழக்குகள் பதியப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்த நிலையில்,  அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன், சம்பந்தி ஆகியோருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மத்திய பாஜக அரசுடன் அதிமுக இணக்கமாக இருக்கும் நிலையில், மத்தியஅரசின் வருமான வரித்துறை திடீரென சம்மன் அனுப்பி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு ஊழல்கள் குறித்து, அப்போது எதிர்க்கட்சிகளாக இருந்த திமுக, பாமக உள்பட பல கட்சிகள் கவர்னரிடம் ஊழல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தன. மேலும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. எதிரக்கட்சிகள் வழங்கிய ஊழல் பட்டியலையும் கவர்னர் மத்தியஅரசுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்பட்டது. சமீபத்தில் முன்னாள் அமைச்சருக்கு சொந்த இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை அதிரடியாக சோதனை நடத்தியது. இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லி விரைந்து சென்று, பிரதமரை சந்தித்தனர். அப்போது, திமுக எடுக்கும் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட வலியுறுத்தியதாக கூறப்பட்டது. ஆனால், மோடி அதற்கு சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என்று தகவல்கள் பரவின.

இந்த நிலையில்,  தற்போது திடீரென வருமான வரித்துறை முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மற்றும் சம்பந்திக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி,   முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உள்பட 8 மாஜி அமைச்சர்கள், முன்னாள் முதல்வர் எடப்பாடியின் மகன் மிதுன்குமார் மற்றும் அவரது சம்பந்தி ஆகியோருக்கு, வருமான வரிக்கு முறையான கணக்கு காட்டவில்லை என கூறி, தற்போது வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மத்தியஅரசின் இந்த திடீர் நடவடிக்கை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மத்தியில் பீதியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.