மும்பையில் ரோட்டோரங்களில் பிசியாக செயல்படும் வடாபாவ், தோசை, சாண்ட்விச் போன்றவைகளை விற்கும் உணவங்களில் வருமானவரித்துறை நடத்திய ரெய்டில் கோடிக்கணக்கான கருப்புப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
tax
தானாக முன்வந்து வருமான வரி செலுத்தும் திட்டத்தின் கீழ் சிறுவணிக மற்றும் ரோட்டோர உணவகங்கள் உள்ளிட்ட அமைப்புகள் அடங்கும். வருமான வரி கணக்குகளை ஒப்படைக்க வேண்டிய கடைசி நாளான செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அதை உறுதிசெய்யும் நோக்கில் மும்பையின் ரோட்டோர கிட்டதட்ட 50 உணவகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
அகமதாபாத், டெல்லி மறும் கொல்கத்தா நகரங்களிலும் இதே போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட ரெய்டுகள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் ஒரு லட்சம் சிறு வணிகர்களும், கடைக்காரர்களும் வருமானவரி கட்ட வேண்டிய இந்த வளையத்துக்குள் வருகிறார்கள். ஆறுமாதங்களாக நடந்த கண்காணிப்புகளுக்கு பிறகு இந்த ரெய்டுகள் நடைபெற்றதாக தெரியவருகிறது.
நடந்த ரெய்டுகளில் பல கடைக்காரர்கள் தங்கள் வாழ்நாளில் வருமான வரி கட்டியதோ அல்லது வருமான வரி அதிகாரிகளை சந்தித்ததோகூட கிடையாதாம். ஆனால் அவர்களது வருமானமோ மிக அதிகம். இவர்களிடம் நடத்திய ரெய்டுகளில் மும்பையில் மட்டும் ரூ. 2 கோடி கருப்புப்பணம் சிக்கியதாக தகவல்கள் வந்திருக்கின்றன.