சென்னை: தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட துணிக் கடைகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக விழுப்புரத்தில் உள்ள எம்.எல்.எஸ் குழுமத்திற்கு சொந்தமான கிரீன்ஸ் வணிக வளாகம், மருத்துவமனை உள்ளிட்ட 10 இடங்களில் 40க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 40 துணிக் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில் மையப்பகுதியில் எம்.எல்.எஸ் குழுமத்தின் கீழ் கிரீன்ஸ் வணிக வளாகம், எம்.எல்.எஸ் ஜவுளி கடை, நகைக்கடை, ஜவுளிக் கடை, பைக் ஷோரூம், டிராக்டர் ஷோரூம், கல்வி நிறுவனங்கள், ஜெய்சங்கரா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் கிரீன்ஸ் வணிக வளாகத்தில் மூன்று திரையரங்கம், துணிக் கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன.

கடலூர், விழுப்புரம், கரூர், குளித்தலை, திருப்பூர், நாமக்கல், நெய்வேலி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 35-க்கும் மேற்பட்ட துணிக்கடைகளில் இன்று காலைமுதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் ஜவஹர் பஜாரில் செயல்படும் துணிக் கடைக்கு காலை 9 மணிக்குள் சென்ற வருமான வரித்துறையினர் கடைக்குள் இருந்த வாடிக்கையாளர்களை வெளியேற்றிவிட்டு சோதனையை தொடங்கினர்.

முசிறியில் உள்ள கடையின் உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடலூரில் இயங்கி வரக்கூடிய பிரபல துணிக்கடையில் புதன்கிழமை காலை சென்னையில் இருந்து 6 காரில் வந்த 15 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை  முடிவில் துணிக் கடைகளில் எந்த அளவிற்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளது எனத் தெரியவரும்.

இந்த எம்.எல்.எஸ் குழுமமானது ரமேஷ், ராஜேஷ், பிரகாஷ், வெங்கடேஷ் ஆகிய 4 சகோதர்களுக்குச் சொந்தமானதாகும். இதில் மூத்த சகோதரர் ரமேஷ் இறந்துவிட்ட நிலையில், மற்ற 3 சகோதரர்களும் தொழிலை கவனித்து வருகின்றனர். சென்னை மற்றும் புதுவையில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் காலை சுமார் 10.30 முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.