சென்னை:  சென்னையில் பல பகுதிகளில், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த  சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் தேசியப் பாதுகாப்பு முகமை ஆகியவை அடுத்தடுத்து பல்வேறு பகுதிகளில் சோதனைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு கோயம்புத்தூரில் காரில் சிலிண்டர்  குண்டு வெடித்த பிறகு தொடர் சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த  வழக்கில் இறந்த மற்றும் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்ததாக கோவையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகம் மட்டும் இல்லாமல் வெளிமாநிலங்களிலும் சோதனை நடைபெற்றது.

தொடர்ந்து பல பகுதிகளில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகளும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியது. அதன் அடிப்படையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக பணியாற்றியபோது அரசு ஊழியர்கள் சட்ட விரோத பணப் பரிமாற்ற செயல்களில் ஈடுபட்டனரா என 34 இடங்களில் அரசு ஊழியர்கள் வீட்டில் சோதனை நடத்தினர் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு உள்பட ‘ பலரது இடங்களில் சோதனை நடைபெற்றது.

தொடர்ந்து,  ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. வருவாயை மறைத்து சட்ட விரோதமாக பணப் பரிமாற்றத் தில் ஈடுபடுவதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளன. அதுபோல, மணல் குவாரிகளிலும் சோதனை நடைபெற்றது,.  கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் 8 மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதில் மொத்தம் கணக்கில் வராத 15 கோடி ரூபாய் மற்றும் பல கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், இன்று சென்னையில் சில பகுதிகளில் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், புரசைவாக்கம் பகுதியில் உள்ள டி.வி. எச் லும்பானி ஸ்கொயர் அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அந்த குடியிருப்பில் 4வது தளத்தில் வசிக்கும், அரசு ஒப்பந்தங்களுக்கு மின் சாதனங்களை விநியோகிக்கும் அமித் என்பவரின் வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த வீட்டில் சமீபத்தில் இந்த வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது

. ஜெயின் வில்லா அடுக்குமாடி குடியிருப்பிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகள் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.